நம்மைச் சுற்றி இருக்கும் காற்றைச் சுத்தப்படுத்துவதுதான் காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க இருக்கும் எளிமையான வழி. இந்த வேலைகளைத் தான் மரங்களும், தாவரங்களும் நமக்கு இலவசமாகச் செய்துதருகின்றன.
வீட்டிற்கு வெளியே மரம் வைத்து சமாளிக்கலாம். வீட்டிற்குள்? கவலை வேண்டாம், சில தாவரங்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றை உள்புறத் தாவரங்கள் என்பர். இந்தத் தாவரங்கள் வீட்டிலிருப்பவர்களை வசந்த காலத்தை உணரச் செய்கின்றன.
வீட்டிற்குள் தாவரங்கள்
இந்தத் தாவரங்களைக் கொண்டு வீட்டை அலங்கரிப்பது குறித்து மட் பாரஸ்ட் அமைப்பின் நிறுவனரும், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளருமான ரத்னா சிங்கிடம் கேட்டோம்.
”வெளிப்புறத்தில் வளர்க்கும் தாவரங்களுடன் ஒப்பிடும்போது, உள்புற தாவர வளர்ப்பிற்கு மிகவும் குறைவான பராமரிப்புதான் தேவையாக இருக்கும். இவற்றின் இருப்பு நமக்கு மன நிம்மதியை அளிக்கும்” என்கிறார் ரத்னா.
சிறு வனம் வேண்டாமா?
இந்தத் தாவரங்கள் விலை அதிகமாக இருக்குமோ என்ற அச்சத்தில் பெரும்பாலானோர் இதைத் தவிர்க்கின்றனர். ஆனால் கற்பனைசெய்து பாருங்கள், உங்களது வீட்டிற்குள் நீங்களே சின்னதாக ஒரு வனத்தை உருவாக்க முடிந்தால்... அதை வேண்டாமென்றா சொல்வீர்கள். வீட்டின் உள்புறத்தை மிக அழகாக தாவரங்களைக் கொண்டே வடிவமைப்பது நிச்சயம் மிகச் சிறந்த தோற்றத்தைத் தரும். இதன் பராமரிப்பும் மிக எளிது.
எங்கு அமைக்கலாம்?
வடக்கு (அ) மேற்குத் திசையை நோக்கி ஜன்னல்கள் இருந்தால் அங்கு உள்புற தாவரங்களை வைக்கலாம். இந்தத் தாவரங்களுக்கு காற்று சுழற்சி முக்கியமானது. நீங்கள் வாங்கும் தாவர வகையைப் பொறுத்து அதற்கு வாரத்திற்கு ஒன்று (அ) இருமுறை நீருற்ற வேண்டும்.
எந்த மண் சிறந்தது?
உள்புறத் தோட்டக்கலைக்கு கருப்பு மண், பெர்லைட் மண் இப்படி தாவரத்திற்கு ஏற்ப மண் வகையைத் தெரிவுசெய்ய வேண்டும். தேங்காய் நார்க் கழிவையும் பயன்படுத்தலாம். வீட்டிற்குள் வளர்க்கும் தாவரங்களுக்கு இது ஏற்றது.
இப்ப ட்ரெண்ட்
பெட்டகம் போன்ற கண்ணாடித் தொட்டியில் வைக்கப்பட்டுள்ள தாவரங்கள்தான் இப்போது ட்ரெண்டாகிவருகின்றன. ஒப்பீட்டளவில் அவை வழக்கமான உள்புறத் தாவரங்களிலிருந்து வேறுபடுகின்றன. அளவிலும் சிறியதாக இருப்பதால் அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாது.
டெரேரியம்
இந்த முறையில் குடுவைப் போன்ற உருண்டை வடிவில் உள்ள மீன் தொட்டிகளில் சின்ன செடிகளை வளர்க்கலாம். அந்த மீன் தொட்டியின் அடிப்புறத்தில் ஒரு லேயர் சிறிய கூழாங்கற்களைப் போட்டு, அதற்கு மேல் ஆற்று மண், அதற்கு மேல்புறம் மண் கலவை போட்டுச் செடிகளை வளர்க்கலாம்.
தண்ணீர் பயன்பாடு குறைவாக உள்ள செடி வகைகள் இதற்குப் பொருத்தமாக இருக்கும். இதனை குளோஸ்டு டெரேரியம் என்ற மூடப்பட்ட நிலையிலும், ஓப்பன் டெரேரியம் என்ற திறந்த அமைப்பாகவும் வைக்கலாம்.
என்னென்ன தாவரங்கள்?
கற்றாழை (அ) அடத்தியாக வளரும் செடிகளை வளர்க்க முடியாது. பெப்பெரோமியா, பிலியா, மணி பிளண்ட், சான்சேவியா மற்றும் சின்கோனியம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஓப்பன் டெரேரியத்தில் அடர்த்தியான செடிகளை வளர்க்கலாம். கற்றாழைகள் அழகாகயிருக்கும்.
வீட்டிற்குள் வளரும் தாவரங்களை நடவுசெய்வதையும், பராமரிப்பதையும் விரும்புவோர், அதைக் கற்றுக் கொண்டு தொழில் ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொள்ளலாம்.
வீட்டின் எந்த மூலையில் எந்த வகையான தாவரங்களை வைக்கலாம், அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து தோட்டக்கலையை விரும்புவோருக்கு சுவாரஸ்யமாகக் கற்றுக் கொடுக்கலாம்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தக் கடைகளைத் திறந்தால் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்கிறார், ரத்னா சிங்.
வீட்டு முற்றங்களில், முன்பகுதிகளில் அழகுக்காக வளர்க்கும் இந்தத் தாவரங்கள் வீட்டிற்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு மனநிம்மதியையும் தருகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.