இந்த வார தொடக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் சீன எதிர்ப்பு உணர்வுகள் அதிகமாக உள்ளன.
நான்கு தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட முதல் மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க அழைப்புகள் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில், “ஐபிஎல் விளையாட்டுக்கு நிதியளிக்கும் சீன நிறுவனங்கள், இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுகின்றன. சீன தொலைபேசி நிறுவனமான விவோவிடமிருந்து ஆண்டுக்கு ரூ.440 கோடி வருமானம் ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைக்கிறது” என்று ஐபிஎல் பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் உணர்ச்சிவசமாகப் பேசும்போது, உங்கள் பகுத்தறிவை விட்டுவிடுகிறீர்கள். சீன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும்போது, அவர்கள் இந்திய நுகர்வோரிடமிருந்து பணத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் ஒரு பகுதியை பிசிசிஐக்கு விளம்பரமாகச் செலுத்துகிறார்கள்.
இந்தப் பணத்துக்கு 42 விழுக்காடு வரியும் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை ஆதரிக்கிறது; சீனாவை அல்ல. விவோ போன்று கடந்தாண்டு ஓப்போவும் ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரராக இருந்தது.
அவர்கள் ஐபிஎல்-ஐ ஆதரிக்கவில்லை என்றால், அவர்கள் அந்தப் பணத்தை மீண்டும் சீனாவுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. அந்தப் பணத்தை இங்கே தக்கவைத்துக்கொண்டால், அதைப் பற்றி நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். அந்தப் பணத்தை வைத்து, வரி செலுத்தி நாங்கள் அரசை ஆதரிக்கிறோம்.
சீன தயாரிப்புகளை இங்கு விற்க அனுமதிக்கும்போது, பணத்தின் ஒரு பகுதி இந்திய பொருளாதாரத்திற்கு திரும்பிவரும்; அது நல்லதுதானே. பிசிசிஐ சீனர்களுக்கு பணம் கொடுக்கவில்லை, மாறாக அதை ஈர்க்கிறது. உணர்ச்சியைக் காட்டிலும் பகுத்தறிவின் அடிப்படையில் நாம் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 2011 உலகக்கோப்பை விவகாரம் - என்ன சொல்கிறார் சங்ககரா!