கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகள் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே நடந்த கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்களில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாகக் கைது நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு கூட காவல்துறையினர் சிலரைக் கைது செய்து விசாரித்துள்ளனர். டிஜே ஹல்லி, கேஜே ஜல்லி காவல் நிலையங்களில் மட்டும் 80 முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களுக்கு எதிரான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கக் காவல் துறையினர் மும்முரமாக இறங்கியுள்ளனர். கலவரம் தொடர்பாக 380க்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரு கலவரம்: தொடரும் கைது நடவடிக்கைகள்!