ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் அக். 26ஆம் தேதி கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த கல்லூரி இறுதியாண்டு மாணவி நிகிதாவை அவரது கல்லூரி வளாகத்திற்கு வெளியே இரண்டு நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
இந்தச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் இது குறித்து ஹரியானா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.
காவல் துறையின் விசாரணையில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்றது தௌஃபீக், ரீஹான் ஆகிய இருவர் எனக் கண்டறியப்பட்டது.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகிதாவை, தௌஃபீக் ஒருதலையாக காதலித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிகிதாவை தௌஃபீக் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து 2018ஆம் ஆண்டு நிகிதாவின் குடும்பத்தினர் தௌஃபீக் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தௌஃபீக், நிதிதாவை பழிவாங்கும் எண்ணத்தில் தனது நண்பருடன் இணைந்து அவரை சுட்டுக்கொன்றதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இக்கொலைத் தொடர்பாக தௌஃபீக், அவரது நண்பர் ரீஹான், துப்பாக்கியை வழங்கிய அஜ்ரூ ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்த சிறப்பு விசாரணைக் குழுவானது, தனது 700 பக்கக் குற்றப்பத்திரிகையை இன்று ஃபரிதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
டிஜிட்டல், தடயவியல் மற்றும் பொருள் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.