அஸ்ஸாம் மாநிலத்தின் பாக்ஜானில் மொத்தம் 23 எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இதில் பாக்ஜான் 5ஆம் எண் எண்ணெய்க் கிணற்றில், கடந்த மே 27ஆம் தேதி ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது. ஆனால், தீயை அந்நிறுவனத்தினர் உடனடியாக அணைக்கத் தவறியுள்ளனர்.
இதனால், சுற்றுச்சூழல், மனிதர்கள், வன விலங்குகளுக்கு பெரும் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகாரளித்தார்.
இந்நிலையில், புகார் மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தீயை அணைக்கத் தவறிய ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.25 கோடியை அபராதமாக விதித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவையும் தீர்ப்பாயம் அமைத்தது. இந்த விவகாரத்தை ஆராய்ந்து, 30 நாட்களில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், எண்ணெய்க் கசிவால் மனித உயிர்களுக்கு ஏற்பட்ட இழப்பு, சேதத்தின் அளவு, வனவிலங்குகள், சுற்றுச்சூழல், சேதங்கள், பொதுமக்களுக்கு சுகாதார அபாயங்கள் உள்ளதா, நீர், காற்று தரவுகளை ஆராய்ச்சி செய்யவும் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.