உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி, 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் ஆகியோர் உள்பட 49 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி 49 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர். எனினும் இந்த வழக்கில் 17 பேர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கானது லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இதுவரை 351 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 24ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட சம்பத் ராய், லல்லு சிங், பிரகாஷ் சர்மா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை (சம்மன்) வழங்கியது.
அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக மொத்தம் 49 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அளித்த புகார்களும் அடங்கும். இந்தப் புகார்களை இரண்டு ஆண்டுகளில் விசாரிக்க வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், 2019ஆம் ஆண்டு மேலும் ஒன்பது மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ராம் லல்லா சிலையை 'பிரண்-பிரதிஷ்டா' செய்யும் நிகழ்வில் யோகி