உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவ ஆதரவாளர்களால் 1992ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கினை ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தினம்தோறும் சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அதேபோல் உபி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் வழக்கு தொடர்பாக தனது வாக்குமூலத்தை ஜூலை 13ஆம் தேதி அளித்திருந்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (ஜூலை 24) தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைகளின் சட்டம் 313 பிரிவின் கீழ் வாக்குமூலங்கள் பதியப்படுவதால், குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேருக்கும், தங்களுக்கு எதிரான ஆதாரங்களுக்கு மறுப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சமீபத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில் குறித்த சரத்பவாரின் கருத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள உமா பாரதி!