யோகா குரு பாபா ராம்தேவ் குஜராத் மாநிலம் நடியாட் என்கிற இடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல், மெக்கா-மெதினா அல்லது வாடிகன் நகரத்திலா கட்டுவது என கேள்வி எழுப்பினார்.
அதேபோல், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவது என்பது வாக்குகளுக்காகவோ அல்லது அரசியலுக்காகவோ இல்லை என கூறிய பாபா ராம்தேவ், இஸ்லாமியர்களுக்கும் ராமர்தான் மூதாதையர் என்றும் கூறினார்.
இந்துக்களின் கடவுளாக வணங்கப்படும் ராமரை, இஸ்லாமியர்களுக்கும் மூதாதையர் என பாபா ராம் தேவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பாபா ராம் தேவ் கடந்த 2-ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தினால் அயோத்தி நோக்கி இந்துக்கள் படையெடுப்போம் என்றும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் மட்டுமே தவிர்ப்பதாகவும் அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.