நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 40 நாள்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைக்குப்பின் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு எழுதப்படுகிறது.
அவ்வண்ணமே இவ்வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சிறு கண்ணோட்டத்தைக் காணலாம்.
வெளியான அயோத்தி தீர்ப்பு...! - முழு விவரம்
- 1528: அயோத்தியில், பாபர் மசூதி கட்டப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்பினர் உரிமை கோரினர்.
- 1853-1949: இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து அந்த இடத்தின் உள்பகுதியை இஸ்லாமியர்களுக்கும் வெளிப்பகுதியை இந்து அமைப்பினருக்கும் ஒதுக்கியது ஆங்கிலேய அரசு.
- 1949: மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, மோதல் உருவானது. இதையடுத்து அது பிரச்னைக்குரிய இடம் என்று அறிவித்த மத்திய அரசு அப்பகுதியைப் பூட்டி சீல்வைத்தது.
- 1950: ராமர் சிலைக்குப் பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என இரண்டு மனுக்கள் ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1959ஆம் ஆண்டு நிர்மோஹி அகராவால் மூன்றாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.
- 1961: உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்ற வேண்டும் என்று கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- 1986: பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும் ராமர் சிலைக்குப் பூஜைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
- 1992 டிசம்பர் 6: பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் விளைவாக நாடு முழுவதும் மோதல்கள் ஏற்பட்டன.
- 2001: பாபர் மசூதி இடிப்பு, வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது.
- 2010: அலகாபாத் நீதிமன்றம், மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ராமர் கோயிலுக்கும் ஒரு பங்கு இடத்தை வக்பு வாரியத்துக்கு வழங்கி தீர்ப்பளித்தது.
- 2011: அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
- 2017: ராமர் கோயில்-பாபர் மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியது.
- 2018 பிப்ரவரி 8: இந்த வழக்கை அரசியல் கட்சிகள் மத ரீதியாக அணுகாமல் நிலப் பிரச்னையாக மட்டுமே பார்க்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
- 2019 மார்ச் 8: இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசிமுடித்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.
- 2019 ஆகஸ்ட் 1: நடுவர் குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.
- 2019 ஆகஸ்ட் 2: அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
- 2019 அக்டோபர் 16: வழக்கின் தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
- 2019 நவம்பர் 9: அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் இஸ்லாமியர்களுக்கு வேறொரு பகுதியில் இடம் ஒதுக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.