அயோத்தியா வழக்கின் விசாரணை 40 நாள்களாக நடந்துவந்த நிலையில், அக்டோபர் 16ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கை திரும்பப்பெறவுள்ளதாக தகவல் வெளியானது. அயோத்தியா வழக்கை தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளன. இந்த வழக்கை முன்னெடுத்து சென்றதில் சன்னி வக்பு வாரியம் மிக முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. மத்தியஸ்தர் குழுவின் இரண்டாவது அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சன்னி வக்பு வாரியத்தை தவிர மற்ற இஸ்லாமிய அமைப்புகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
நிர்வானி அகாதா, நிர்மோஹி அகாதா, ராமஜென்ம பூமி பன்ரூதர் சமிதி உள்ளிட்ட அமைப்புகள் மத்தியஸ்தர் குழுவின் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அயோத்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.