ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமீப காலங்களில் வெளிநாட்டு பறவைகள், காகங்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தப் பறவைகள் அனைத்தும் பறவைக் காய்ச்சலின் காரணமாகவே உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் கால்நடை வளர்ப்புத் துறையின் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், “கியோலாடியோ தேசிய பூங்கா, பிற சரணாலயங்கள், சம்பர் ஏரி மற்றும் பறவைகள் திரண்டு வரும் அனைத்து இடங்களையும் கண்காணிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் மற்றும் பிற பறவைகள் இறப்பதைக் கருத்தில் கொண்டு சிறப்பு விழிப்புடன் இருக்கவேண்டும்.
பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும். கால்நடை மருத்துவர்கள் மற்றும் பறவை வல்லுநர்கள் இந்தச் சம்பவங்களை உன்னிப்பாக ஆராய்ந்து நிலைமை மோசமடைவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், இறந்தப் பறவைகள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இருப்பதைக் கண்டால், கால்நடை வளர்ப்புத் துறையால் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 625 பறவைகள் இறந்தது தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தார்.
ஜலவரில் இருந்து அனுப்பப்பட்ட சடலங்களின் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. இவை பறவைக் காய்ச்சலின் துணை வகை எச் 5 என் 8, எச் 5 என் 1 வைரஸைக் காட்டிலும் குறைவான பாதிப்பை கொண்டதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி: ரெட் அலர்ட் விடுத்த ராஜஸ்தான் வனத் துறை