இந்தியா ஒரு தேசம் அல்ல, பல நாடுகளின் கூட்டமைப்பு. அது இயங்குவதற்கு முக்கிய காரணம் அதன் அரசியலமைப்பு சட்டம்தான் என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா தெரிவிக்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசியலிசம் ஆகிய கொள்கைகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவை காப்பாற்ற இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அறைகூவல்விடுகிறார். நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர்.
அப்படி நாட்டில் என்னதான் நடக்கிறது எனக் கேள்வி எழுகையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்கிறார். அதற்கு காரணமாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. நாட்டின் கருத்தாக்கத்தை சிதைக்கும் வகையில் பல செயல்களை வரும் காலங்கள் சந்திக்க நேரிடும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமா கடிதம் நாடு முழுவதும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது. அரசியலமைப்பை சமரசம் செய்வது யார் என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இதேபோல், ஐஏஎஸ் அலுவலர் ஷா பைசல், காஷ்மீர் மக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாகவும் கூறி தன் பதவியை ராஜினாமா செய்தார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் அலுவலர் கண்ணன் கோபிநாத் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் விசாரணை அமைப்புகளால் குறிவைக்கப்படுகின்றனர் என பலர் கூறுகின்றனர். இதற்கு ஏற்றார்போல், உச்ச நீதிமன்றம், சிபிஐ, தலைமைத் தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். தன்னாட்சி அமைப்புகளை செயல்படாத அளவுக்கு கட்டுப்படுத்தி வைத்திருப்பது யார் என இங்கு கேள்வி எழுகிறது.
ஜனநாயகம் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் சட்டப்பேரவையை இயக்கும் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகத்தை இயக்கும் அரசு அலுவலர்கள், நீதித்துறையை இயக்கும் நீதிமன்றங்கள், ஊடகங்கள் ஆகிய நான்கு தூண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
ஆனால், தற்போதைய இந்தியாவில் நிர்வாகத்தை இயக்கும் அரசு அலுவலர்கள் தொடர்ந்து தங்களது பணியைவிட்டு விலகிவருகின்றனர். அவர்கள் ராஜினாமா செய்வது மட்டுமல்லாமல் அதற்கு அவர்கள் கூறும் காரணம் எதிர்கால இந்தியாவை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் நோக்கர்களும்.
முக்கியமாக தற்போது ராஜினாமா செய்திருக்கும் சசிகாந்த் கூறியிருக்கும் காரணங்களில் ஒன்றான, ”நாட்டின் கருத்தாக்கத்தை சிதைக்கும் வகையில் பல செயல்களை வரும் காலங்கள் சந்திக்க நேரிடும்” என்பதை அவ்வளவு எளிதாக கடந்துசென்றுவிட முடியாது என பலர் கூறுகின்றனர்.
எனவே எதிர்கால இந்தியாவை காப்பதற்கு தற்போது ராஜினாமா செய்யும் அரசு அலுவலர்கள் கூறும் காரணத்தை உடனடியாக களைய வேண்டும். அதற்கு தன்னாட்சி அமைப்புகளில் மாற்றம் ஏற்படுவதுடன், அந்த அமைப்புகளில் எந்த தலையீடும் இருக்கக் கூடாது என்பதே மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் நோக்கர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது.