ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக நடைப்பயணமாகச் செல்கின்றனர். அவ்வாறு நடந்து செல்லும்போது இடையில் எதாவது ஒரு இடத்தில் ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு ஓய்வெடுக்க தண்டவாளத்தில் தூங்கி, 16 தொழிலாளிகள் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சைலேஷ் யாதவ், ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ்க்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்த அவர், வருங்காலத்தில் இதே மாதிரியான உயிரிழப்புச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஊரடங்கால் ரயில்கள் இயங்காது என நினைத்து, பாதுகாப்பில்லாமல் தண்டவாளத்தில் தொழிலாளிகள் உறங்கியுள்ளனர் என்று கூறியுள்ள அவர், ரயில்களின் செயல்பாடு, பராமரிப்பு, ரயில்வே பணியாளர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.