மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். அதில் கிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக அதிஷி, பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், காங்கிரஸ் சார்பில் அரவிந்தர் சிங் ஆகியோர் களம் இறங்கியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் மாறி மாறி கடும் விமர்சனங்களை முன்வைத்து ஆங்காங்கே அனல்பறக்கும் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் கம்பீர் தனது தேர்தல் பரப்புரையில், தன் சாதி பெயரைச் சொல்லி தன்னை தரக்குறைவாக பேசினார் என குற்றம்சாட்டிய அதிஷி, தன்னைப் பற்றி துண்டுப் பிரசுரங்களில் தவறாக பிரசுரித்து மக்களிடம் கம்பீர் விநியோகித்தார் எனவும் புகார் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு குறித்து கம்பீர் தெரிவிக்கையில், "என் மீது அதிஷி கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். இவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதரமற்றது. இப்படி என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு, அதிஷி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
மேலும் இந்த குற்றச்சாட்டு பொய் என்று தெரியவந்தால், இதை கூறியவர்கள் பதவி விலகத் தயாரா? முக்கியமாக முதலமைச்சர் தனது பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளாரா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.