புதுச்சேரி பாலாஜி நகர் பகுதியில் உள்ள கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் தனிமையாக வசித்து வந்தார் தத்துவானந்தா சுவாமி (வயது 64). அவர் அந்த பகுதியில் ஜோதிடம் பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த கோகுலம் குடியிருப்பு காவலாளி வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குற்றவாளியை அடையாளம் காண மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தத்துவானந்தா சுவாமியின் வீட்டிற்குள் சென்றதும், அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தத்துவானந்தா சுவாமியைக் கொலை செய்தார்களா? அல்லது அது காவலாளி கூறும் கதையா? என்ற கோணத்தில் கோரிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.