அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் குடியேறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பித்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று வெளியான இறுதி பட்டியலில், 19 லட்சம் அசாம்வாசிகளின் பெயர் விடுபட்டுள்ளது. எனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இதில், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான அனந்த குமார் மாலோவின் பெயரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபட்டுள்ளது. இது, நாடு முழுவதும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியிடப்பட்ட இறுதி பட்டியலால், 19 லட்சம் பேர் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விடுபட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம், என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1000 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படவுள்ளது. தீர்ப்பாயங்களில் வழக்கு தோற்றால், உயர்நீதிமன்றத்திலும், அதன்பின் உச்ச நீதிமன்றத்திலும் இது சார்பாக வழக்கு தொடரலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.