கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டை வீட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவிவருகிறது. அதிலிருந்து இன்று முதல் சில தொழில்களுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்தது. பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசின் விலக்கினை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை.
இதனிடையே இன்று முதல் 33 சதவிகித ஊழியர்களுடன் மாநில அரசு ஊழியர்கள் பணியைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது சொந்த வாகனங்களில் வராமல், மாநில அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் ஊழியர்கள் அனைவரும் அரசு வாகனங்களிலேயே பணிக்கு வந்தனர்.
அதேபோல் அனைத்து ஊழியர்களும் முகக் கவசங்கள் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும், அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னதாக சானிடைசர்களால் கைகள் நன்றாக சுத்தம் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அரசு சார்பாக 33 சதவிகித ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம் இயல்பு நிலையை நோக்கி அஸ்ஸாம் மாநிலம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் புதிய வைரசால் உயிரிழந்த பூனைகள்: பொதுமக்கள் பீதி!