இது குறித்து அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்கள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கோலபாரா, ஹோஜாய் ஆகிய இடங்களில் தலா இரண்டு பேர் வெள்ளத்தால் இறந்துள்ளனர். இதுவரை மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 320 பேர் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள் இல்லாமல் தவித்துவருகின்றனர். தற்போது கரோனா தொற்று இருந்தாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்ட நிர்வாகத்தால் திறக்கப்பட்ட 190 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
டாரங் மாவட்டத்தில் உள்ள ஒராங் தேசிய பூங்காவிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கிருக்கும் விலங்குகள் முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன என வனத் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். இந்தப் பூங்காவில் ஒற்றைக்கொம்பு கொண்ட 68 காண்டாமிருகங்களும், மற்ற அரியவகை உயிரினங்களும் உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.