வரலாறு காணாத கனமழையால் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 28 மாவட்டங்களில் உள்ள 36 லட்சம் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து அம்மாநில பேரிடர் மீட்புத் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''பெரும் வெள்ளத்தால் மாநிலத்தில் இருக்கும் 36 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தூப்ரி, கோல்பாரா, பார்பேட்டா, மொரியோயன் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே உலகப் புகழ்பெற்ற தேசிய காசிரங்கா மிருகக்காட்சி பூங்காவில் மழைநீர் அளவு அதிகரித்ததால் 86 மிருகங்கள் உயிரிழந்ததாகவும், 125 விலங்குகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 28 மாவட்டங்களில் மூவாயிரத்து 14 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் நாசமாகியுள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது. இதில் வெள்ளத்தால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் 711 முகாம்கள் தொடங்கப்பட்டு, 51 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பொய் பேசுவதை நிறுத்திவிட்டு இப்போதாவது மக்களை காப்பாற்ற முயலுங்கள் " - பிரியங்கா வேண்டுகோள்