பிகாரின் ஹில்சா பகுதியில் வசித்துவரும் அசுதோஷ்குமார் மனவ், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் பயன்பாட்டினால்வரும் ஆபத்துகள் குறித்து, ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலேயே, இவர் தனது பெரும்பாலான நேரத்தைக் செலவிடுகிறார்.
வயதானவர்களிடம் மட்டுமல்லாமல், பள்ளிக் குழந்தைகள் மத்தியிலும் பிளாஸ்டிக் குறித்து இவர் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டினால்வரும் தீமைகள் குறித்து எளிய முறையில் குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இவர், பிளாஸ்டிக்கை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உபயோகிக்கும் உறுதிமொழியையும் ஏற்க வைக்கிறார்.
குமாரின் கருத்துகள் குழந்தைகளை மாற்றத்துக்கு காரணமானவர்களாக உருவாக்குகிறது. மேலும், இவரது கருத்துக்களால் இவரைச் சுற்றியுள்ளவர்கள் பலர் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதில்லை. அசுதோஷ்குமாரின் சமூக சேவைகளை பிஹர்ஷரிப் நகராட்சி ஆணையர் சவுரப் குமார் ஜோர்வாலும் வெகுவாகப் பராட்டியுள்ளார்.
இதுகுறித்து அசுதோஷ்குமார் மனவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல காலமாகவே எனக்குச் சமூக சேவைகளில் நாட்டமிருந்தது. 1991ஆம் ஆண்டு எனது நண்பர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகளில் ஈடுபடத்தொடங்கினேன். ஞாயிறுதோறும் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்வோம். அப்போதுதான் பெரும்பாலான கால்வாய் அடைப்புகள் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படுகிறது என்பதை புரிந்துகொண்டோம். அப்போது முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராக பரப்புரை செய்துவருகிறேன்" என்றார்.
இதற்கு முன், பிகார் முழுவதும் குட்கா விழிப்புணர்வு பரப்புரையிலும் குமார் ஈடுபட்டிருந்தார். தற்போது, இவர் தூய்மையான இந்தியா பரப்புரைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். தேசத்துக்காகவும், சமூகத்துக்காகவும், தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார் குமார். மேலும், "சமூக சேவைகளுக்காக எனது வாழக்கையை அர்பணித்துள்ளேன். எனது வாழ்வில் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன். அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்" என்கிறார் இவர்.
இதையும் படிங்க: குப்பையும் கோபுரமாகும்... நெகிழியில் உருவான ராட்சத ராட்டினம்!