குழந்தைகள் எந்தளவுக்கு எளிதான வாக்கியங்களைப் படிக்கின்றனர், அடிப்படை கணக்குகளை எப்படி போடுகின்றனர் போன்ற விவரங்கள் கல்வியாண்டின் ஆண்டுநிலை அறிக்கையில் வெளியிடப்படுகிறது.
பிராதம் அமைப்பு
தேசிய அளவில் எடுக்கப்படும் இந்தக் கணக்கெடுப்பானது குழந்தைகளின் கல்வித்திறன் குறித்து மக்கள் அறிந்துகொள்ள பயன்படுகிறது. பிராதம் என்ற அமைப்பு 2005ஆம் ஆண்டு முதல் மாவட்டங்களில் உள்ள அமைப்புகளுடன் தொடர்புகொண்டு களநிலவரங்களை அறிந்து கணக்கெடுப்பை வெளியிட்டுவருகிறது.
2017ஆம் ஆண்டு, 14 முதல் 18 வயது இளைஞர்களின் திறன், அனுபவம், லட்சியம் ஆகியவற்றிற்கு கல்வியாண்டின் ஆண்டுநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு, நான்கு முதல் எட்டு வயதுடைய குழந்தைகளின் கல்வித் திறனுக்கு அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஆண்டுநிலை அறிக்கை
மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் விகிதம் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. இந்தாண்டு தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
மனித வாழ்க்கையில் ஆரம்ப காலமான 0 முதல் 8 வயது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அறிவாற்றல், உணர்ச்சி, சமூகம் ஆகிய தளங்களில் முக்கியத் தாக்கங்கள் இந்தக் காலகட்டத்தில்தான் உண்டாகும்.
2019ஆம் கல்வியாண்டின் ஆண்டுநிலை அறிக்கை: வேலூர் மாவட்டம்
- கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட கிராமங்கள் - 60
- கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட வீடுகள் - 1183
- கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட குழந்தைகள் - 1550
- ஆண் குழந்தைகள் - 760
- பெண் குழந்தைகள் - 890
கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட 4 வயது குழந்தைகளில், 0.7 விழுக்காடு குழந்தைகள் கல்வி கற்பதற்காக எந்தக் கல்வி நிலையத்திலும் சேர்க்கப்படவில்லை.
98 விழுக்காடு குழந்தைகள் ஆரம்ப வகுப்புகளில் பயின்றுவருகிறார்கள். 1.3 விழுக்காடு குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு படித்துவருகின்றனர்.
ஆரம்பக் கல்விக்கு முன் சில குழந்தைகள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளில் பயில்வதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சில குழந்தைகள் அங்கன்வாடிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட 4 வயது குழுந்தைகளில், வரிசைப்படுத்தும் அறிவு 92.1 விழுக்காடு குழந்தைகளுக்கு உள்ளது. 79.5 விழுக்காடு குழந்தைகளுக்கு இடஞ்சார்ந்த அறிவு உள்ளது. 66.7 விழுக்காடு குழந்தைகளுக்கு காலவரிசைப்படுத்தல் குறித்த அறிவு உள்ளது.
அறிவாற்றல் திறனாய்வு
கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவர்களில், 75.4 விழுக்காடு மாணவர்களுக்கு எழுத்துகளை சரியாகப் படிக்கும் திறனில்லை. 10.9 விழுக்காடு குழந்தைகள் எழுத்துகளைப் படிக்கின்றனர். ஆனால், வாக்கியத்தை படிப்பதில்லை. 10.1 விழுக்காடு குழந்தைகளுக்கு வாக்கியம் படிக்கும் திறன் உள்ளது. ஆனால், ஒன்றாம் வகுப்புக்கு ஏற்ப படிப்பதில்லை. 3.7 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே ஒன்றாம் வகுப்புக்கு ஏற்ப படிக்கின்றனர்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் 32.9 விழுக்காடு குழந்தைகளுக்கு எண்கள் குறித்த அறிவாற்றல் இல்லை. 38.4 விழுக்காடு குழந்தைகளுக்கு முதல் ஒன்பது எண்கள் குறித்து அறிவாற்றல் இருந்தபோதிலும், அதற்கு பிறகு வரும் எண்கள் குறித்த அறிவாற்றல் இல்லை. 28.7 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே முதல் 99 எண்கள் குறித்த அறிவாற்றல் உள்ளது.
மூன்றாம் வகுப்பு மாணவர்களில், 4.8 விழுக்காடு குழுந்தைகளுக்கு எண்கள் குறித்த அறிவாற்றல் இல்லை. 13.2 விழுக்காடு குழந்தைகளுக்கு முதல் ஒன்பது எண்கள் குறித்து அறிவாற்றல் இருந்தபோதிலும், அதற்குப் பிறகு வரும் எண்கள் குறித்த அறிவாற்றல் இல்லை. 81.9 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே முதல் 99 எண்கள் குறித்த அறிவாற்றல் உள்ளது.
ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் 38.8 விழுக்காட்டினருக்கு ஒற்றை எண் அடங்கிய கூட்டல் தெரியும். 32.6 விழுக்காட்டினருக்கு ஒற்றை எண் அடங்கிய கழித்தல் குறித்து தெரியும். 49.9 விழுக்காட்டினருக்கு எண்கள் ஒப்பிடும் முறை குறித்து தெரியும்.
உணர்ச்சிகள் திறனாய்வு
நான்கு வயது குழந்தைகளில் 26.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் ஆகிய உணர்ச்சிகள் குறித்த புரிதல் இருக்கிறது. எட்டு வயது மாணவர்களில் 65.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே நான்கு உணர்ச்சிகள் குறித்த புரிதல் உண்டு.
ஒன்றாம் வகுப்பில், அரசுப் பள்ளிகளில் 57.7 விழுக்காடு குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் 42.3 விழுக்காடு குழந்தைகளும் பயின்றுவருகின்றனர்.
இரண்டாம் வகுப்பில், அரசுப் பள்ளிகளில் 57.5 விழுக்காடு குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் 42.5 விழுக்காடு குழந்தைகளும் பயின்றுவருகின்றனர்.
மூன்றாம் வகுப்பைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் 70.6 விழுக்காடு குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் 29.5 விழுக்காடு குழந்தைகளும் பயின்றுவருகின்றனர்.
கொடுக்கப்பட்ட அறிக்கையின்படி, ஒன்றுமுதல் மூன்றாம் வகுப்புவரை படிக்கும் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றுவருகின்றனர். மூன்றாம் வகுப்பில் மட்டும், 70.6 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்.
இதையும் படிங்க: 'மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க' - ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி