அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சித் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை இன்று (டிச25) சந்தித்துப் பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் இதனை அமல்படுத்தக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓவைசி, அமித் ஷா மக்களவையில், தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார். அதற்கு பெருமளவு எதிர்ப்பு கிளம்வே, வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்படும் என்கின்றனர். இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்.
பாஜக கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை ஒன்றுதான்.” என்றார். குடியுரிமை திருத்த சட்டம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு மட்டும் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிமக்கள் தேசிய பதிவேட்டை செயல்படுத்த பாஜக முயற்சி - ஓவைசி