சட்டப்பிரிவு 35ஏ
அரசியலமைப்புச் சட்டம் 35ஏ ஜம்மு காஷ்மீர் அரசுக்கு நிரந்தர குடியிருப்பாளர்கள் யார் என்பதை வரையறுக்கும் அதிகாரத்தையும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு, உதவித் தொகைகள் உள்ளிட்டவற்றில் சிறப்புச் சலுகைகளை வழங்கும் அதிகாரத்தையும் அளித்திருந்தது.
எப்படி உருவானது 35ஏ?
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் மாநிலத்தைச் சுதந்திரத்துக்கு முன் ராஜா ஹரி சிங் ஆட்சி செய்துவந்தார். அப்போது 1927, 1932ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை வரையறுக்கும் வகையில் சட்டங்களை இயற்றினார். இச்சட்டம் மூலம் காஷ்மீருக்குக் குடிபெயர்பவர்களையும் காஷ்மீர் அரசால் கட்டுப்படுத்த முடியும்.
பின்னர் 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஹரி சிங் இந்திய அரசுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர்க்கப்பட்டது. 1949ஆம் ஆண்டு காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்த ஷேக் அப்துல்லா, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக 370 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.
1952ஆம் ஷேக் அப்துல்லா மத்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அரசியலமைப்பின் பல சட்டங்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் காஷ்மீருக்கும் நீடிக்கப்பட்டது. மேலும் புதிதாக 35ஏ என்ற சட்டப் பிரிவு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
சட்டப்பிரிவு 35ஏ-இன் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள்:
1956ஆம் ஆண்டு காஷ்மீருக்கான தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி 1911ஆம் ஆண்டுக்கு முன் காஷ்மீரில் பிறந்தவர்கள் அல்லது குடியேறியவர்கள் காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பாளர்களாகக் கருதப்படுவர். மேலும் சட்டப்படி பத்து வருடங்களுக்கு முன் காஷ்மீரில் நிலம் வாங்கியவர்களும் பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களாகக் கருதப்படுவர்.
இந்த நிரந்தர குடியிருப்பாளர்கள் சட்டப்படி, புதிதாக காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்களாகக் கருதப்படமாட்டார்கள். மேலும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது. இது அனைத்து இந்தியர்களும் சமம் என்று கூறும் சட்டப் பிரிவு 15-க்கு எதிராக இந்திய குடிமகன்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பது போல அமைந்துள்ளதாகச் சிலர் கூறினர்.
அதேபோல இச்சட்டத்தின்படி பெண் நிரந்தர குடியிருப்பாளர்கள், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் ரத்து செய்யப்படும். 2002ஆம் ஆண்டு காஷ்மீர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதாவது காஷ்மீர் பெண்கள் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களைத் திருமணம் செய்துகொண்டாலும் அவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் சிறப்புச் சலுகை வழங்கப்படும் என்று மாற்றியமைக்கப்பட்டது.