கர்நாடகாவின் முன்னாள் நீர்பாசனத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமார் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை நேற்று அவரைக் கைது செய்தது. இதைத் தொடர்ந்து அம்மாநில காங்கிரஸ் கட்சி, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது. இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் சிலர் அரசுப் பேருந்து எரிப்பு, கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி தனி நபரை இலக்கு ஆக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.