காஷ்மீரின் பல பகுதிகளிலும் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனிடையே, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பலூனா கிராமத்தில் உள்ள ஷமிமா என்ற பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியதால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் செய்தவறியாமல் தவித்துள்ளனர்.
அப்போது, ஷமிமாவை 100 பாதுகாப்புப் படை வீரர்களும் 30க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் நான்கு மணி நேரம் தோளில் சுமந்து சென்று அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ பாதுகாப்பு படையினரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று நாள்கள் பயணமாக இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்!