உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூலை மாதம் பதிவிட்ட கருத்துத் தொடர்பாக அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், உடனடியாக அவருக்கு தண்டனை எதையும் அறிவிக்காமல் அவரது கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு அவருக்கு 2-3 நாள்கள் அவகாசம் வழங்குவதாகக் கூறி நீதிமன்றம் தனது விசாரணையை ஒத்திவைத்தது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது கருத்துகளில் இருந்து நான் பின்வாங்க விரும்பவில்லை. நான் முன்வைத்த கருத்துகளின் மீது இப்போதும் உறுதியாக இருக்கிறேன். அவர்களின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை தான் என் எழுத்துகள் பிரதிநிதித்துவப்படுத்தின. இந்த நாட்டின் ஒரு குடிமகனாக, இந்த நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்த வழக்குரைஞராக எனது உயர்ந்த கடமைகளுக்கு ஏற்ப, நான் நம்புகிறபடி இந்த நம்பிக்கைகளின் மீது என் கருத்தை முன்வைத்தேன்.
எனவே, எனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பது என்பது நேர்மையற்றதாகவே இருக்கும். மேலும், உச்ச நீதிமன்றத்தால் தீர்க்கப்படாத முழு விவரங்களுடன் உண்மையை மன்றாடியதாக அவர் கூறியுள்ளார். மன்னிப்பு கேட்க மறுத்து, பூஷன் கூறுகையில், உண்மை என்று நம்பும் கருத்தைத் திரும்பப் பெற்றால், அது "எனது மனசாட்சி"யை அவமதிப்பதாக இருக்கும்.
உச்ச நீதிமன்றமானது, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நம்பிக்கையின் கடைசி மிக சக்திவாய்ந்த கோட்டையாகவே கருதப்படுவதாக நான் நம்புகிறேன். மக்கள் சட்டத்தின் மற்றும் அரசியலமைப்பின் ஆட்சியை உறுதி செய்வதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பும் ஒன்றை குறித்து விமர்சிப்பது, அவர்களது கடமையாக அமைகிறது.
அந்த வகையில், நான் உச் சநீதிமன்றத்தையோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட தலைமை நீதிபதியையோ இழிவுபடுத்துவதற்காக எனது பதிவை இடவில்லை. மாறாக ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கிறேன். அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மக்களின் பாதுகாவலர் என்ற எனது நீண்டகால அடையாளத்திலிருந்து நீதிமன்றம் எந்தவொரு சறுக்கலையும் அடையக் கூடாது என்று கருத்து கூறினேன்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் என் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதற்காக நான் வேதனைப்படுகிறேன். இந்த வேதனை எனக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதற்காக அல்ல. நான் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளேன் என்பதற்காக வருந்துகிறேன்.
ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்று கருதுகிறேன். என்னுடைய ட்விட்டர் பதிவுகள் என்னுடைய கடமையை நிறைவேற்றும் முயற்சிகளே. அமைப்பு மேம்படுவதற்காகப் பணியாற்றும் முயற்சி என்றே என்னுடைய ட்விட்டர் பதிவுகள் பார்க்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.