உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் விரைவாகப் பரவிவருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றன. இந்தத் திட்டங்கள் விளிம்புநிலை மக்களைச் சரியாகச் சென்று சேர்கிறதா என்றால் கேள்விக்குறிதான் விடை.
கரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு மாநில அரசுகளும் முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்களை மக்களுக்கு வழங்கிவருகின்றன. அந்த வகையில் ஆந்திரப் பிரதேச அரசும் மக்களுக்கு முகக்கவசங்களை வழங்குகிறது. ஆனால் இந்த முகக்கவசங்கள் பெரும்பாலும் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், காஞ்சரபாடு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் முகக்கவசங்கள் கிடைக்காததால், பாதுகாப்புக் கருதி இலைகளை முகக்கவசமாகப் பயன்படுத்திவருகின்றனர். இலைகளில் உள்ள மருத்துவ குணம் தங்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என அம்மக்கள் நம்புகின்றனர்.
கரோனா தொற்றால் பழங்குடியின மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதை மறந்து அரசு செயல்படுகிறது. அவர்களுக்கான உதவிகள் விரைந்து கிடைக்க வேண்டும் எனச் சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.