இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையினரால் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிக்குள்பட்ட கார் நிக்கோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலிலிருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட இலக்கில் இருந்த கப்பலை, ஏவுகணை சரியாகத் தாக்கியது எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்த ஏவுகணை 400 கிமீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம், இந்த ஏவுகணை மூலம் நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கும் சோதனையும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.