அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 2019 டிசம்பர் மாதம் நிகழ்ந்த கலவரத்திற்கு மாணவர் ஷர்ஜீல் உஸ்மானி நிகழ்த்திய உரைதான் காரணம் என்று காவல் துறையால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீ ராஜேஷ் தியோ தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஷர்ஜீல் உஸ்மானி மீது தேச துரோகம் (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ), பகைமையை ஊக்குவித்தல் (இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அவர் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, உஸ்மானி மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உஸ்மானியை பிணையில் விடுவிக்கக் கோரி அவரது பெற்றோர் சார்பில் அலிகார் மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான இன்றைய (செப்டம்பர் 3) விசாரணையில் முன்னாள் மாணவர் ஷர்ஜீல் உஸ்மானிக்கு பிணை வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. நீதிமன்றத்தின் பிணை உத்தரவில், உலகளவில் கல்வித்துறையில் அலிகார் பல்கலைக்கழகத்திற்கு பெரும் மதிப்பு இருக்கிறது. சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து அங்கு நடைபெற்ற வன்முறைகளின்போது உஸ்மானி அந்த இடத்தில் இல்லை.
குற்றம் நடந்த இடத்தில் இருந்து அவர் கைது செய்யப்படவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் மீது எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. எனவே நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா, அலிகார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பைத் தொடர்ந்து வளாகங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்த பின்னர் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.