தெலங்கானாவில் போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைப்பது, போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்வது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23 நாள்களாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையே தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டியது.
நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில், தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்துக் கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கம்மம் பகுதியில் வசித்துவரும் நீரஜா என்ற பெண் நடத்துநர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரோடு சேர்த்து இந்தப் போராட்டத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தத் தற்கொலை குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து தொடர்ந்து மாநில அரசு மவுனம் காத்துவருவது போராட்டத்தில் ஈடுபடுவோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'போராட்டம் தொடரும்' - தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு!