உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் விகாஸ் துபே. அவரை கைது செய்வதற்காக காவல் துறையினர் அவரது கிராமத்திற்கு சென்றபோது, விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதல் டிஎஸ்பி உள்பட எட்டு காவலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் விகாஸ் துபேவின் கூட்டாளிகள் பலரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி விகாஸ் துபேவும் காவல் துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் எட்டு காவலர்களை சுட்டுக்கொலை செய்த விகாஸ் துபேவின் கூட்டாளிகளைக் கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக விகாஸ் துபேவின் முக்கிய கூட்டாளியான சிவம் துபே நேற்று (ஜூலை 23) இரவு உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடி படைக் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இதைப்பற்றி சிறப்பு அதிரடி படையின் விஷால் விக்ரம் சிங் பேசுகையில், ''கான்பூரில் நகரில் பதுங்கியிருந்த சிவம் துபே கைது செய்யப்பட்டுள்ளார். விகாஸ் துபேவின் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காவல் துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து டபிள் பேரல் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது'' என்றார்.
இதையும் படிங்க: என்கவுன்ட்டர் செய்யப்பட்ட துபே: நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்