மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஓம் பிரகாஷ் சவுகான் இன்று உயிரிழந்தார். மாநிலத்தில், கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது மருத்துவர் இவராவார்.
ஓம் பிரகாஷ் சவுகான், இந்தூர் மாவட்டத்தின் முன்னாள் சுகாதார அலுவலராகவும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு தொடர்ச்சியான சளி மற்றும் இருமல் இருந்தது. மேலும் மூச்சு விடுவதிலும் சிரமத்தை அனுபவித்தார்.
இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
முன்னதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 9) 65 வயதான டாக்டர் சத்ருகன் கோவிட்-19 பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தெரியவருகிறது. இந்தூரில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக காணப்படுவதை தொடர்ந்து அம்மாவட்ட எல்லைகளை மூடி சீல் வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பேசிய மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்தூர் மாவட்டத்துக்குள் யாரையும் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்க மாட்டேன். இந்தூர் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் 426 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 33 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகம் பாதித்த நகராக இந்தூர் விளங்குகிறது.