மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக எம்.எல்.சி. (சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்) கோபிசந்த் படல்கர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “மகாராஷ்டிராவை பாதித்த கரோனா” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை விமர்சித்திருந்தார். இந்தக் கருத்து தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களை கொதித்தெழ செய்துள்ளது.
இதையடுத்து பாஜக எம்.எல்.சி.க்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையில் பீட் மாவட்டத்திலுள்ள காவல்நிலையத்தில் கோபிசந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக மெஹபூப் ஷேக் கூறுகையில், “நாட்டின் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அரசியல் தலைவரை ஆட்சேபகத்துக்குரிய வகையில் அவர் விமர்சித்துள்ளார். ஆகவே அவர் மீது நான் வழக்குப்பதிவு செய்தேன்.
மேலும், இரு சமூகங்களுக்கு இடையே கசப்பை உருவாக்கும் அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்” என்றார். கோபிசந்த் தனது அறிக்கையில், “நலிந்த சமூகம் ஒன்றை குறிப்பிட்டு அதற்கு எதிராக தேசியவாத காங்கிரஸார் ஆதிக்கம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்காக ஏற்கனவே கோபிசந்த் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இது அவர் மீது அளிக்கப்பட்ட இரண்டாவது புகாராகும்.
மேலும், மாநிலத்தின் கடலோர பகுதியான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லூனில் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் இந்தேபூர், ஜெஜூரி, ஷிரூர், அம்பேகான் மற்றும் கெட் உள்ளிட்ட புனே மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.
இருப்பினும் சோழாப்பூரில் கோபிசந்த்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: ஆந்திராவில் 11 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!