சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கனக் நகரின் வனப்பகுதி அருகே யானை ஒன்று இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த பெண் யானை குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின்படி, அரசு கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, உடற்கூறாய்வு சோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவு வெளிவந்த பின்னரே, பெண் யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று முன் தினம் பிரதாப்பூர் கிராமம் அருகே 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றின் இறந்த சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 20 நாள்களில் 3 யானைகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழந்த இந்த இரண்டு யானைகளும் 18 யானைகளை கொண்ட ஒரே மந்தையைச் சேர்ந்தவை என்று வனத்துறையினரால் நம்பப்படுகிறது.
வடக்கு சத்தீஸ்கரில் சுமார் 250 காட்டு யானைகள் உள்ளன. அவை நிலக்கரி நிறைந்த வன வரம்பில் சுற்றித்திரிகின்றன அவற்றை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் கருவுற்றிருந்த யானை ஒன்று வெடிமருந்து கலந்த அன்னாசி பழத்தை உண்டு உயிரிழந்த செய்தியே மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காத சூழலில் சத்தீஸ்கரில் இரண்டு யானைகள் மர்மமாக இறந்துள்ளது நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது.