டெல்லி: மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து, 28ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தானும் விவசாயிகளுடன் இணைந்து போராட்டடத்தில் ஈடுபட போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு விவகாரம் தொடர்பான போராட்டத்தின் போது தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தும், இதுவரை அவற்றை நிறைவேற்றவில்லை எனவும், அவர் குற்றம்சாட்டினார்.
ஈடிவி பாரத் உடனான சிறப்பு நேர்காணலின் போது பேசிய அன்னா ஹசாரே, "சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள தகவலின் படி, விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களுக்கு சரியான விலையைப் பெறுவதில்லை.
தங்களுக்கு நஷ்டம் ஏற்படும்பட்சத்தில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். மத்திய அரசு தலையிட முடியாதவாறு, மத்திய வேளாண் ஆணையத்துக்கு அரசியலமைப்பு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தைப் போன்று, வேளாண் துறைக்கென தன்னாட்சி உரிமையுடைய அமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும். இதனால் விவசாயிகளின் பிரச்னைகள் எளிதில் தீர்க்கப்படும். உருளைக் கிழங்கு, தக்காளி, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணியிக்க வேண்டும்" என்றார்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இணைந்து டெல்லி-ஹரியானா, டெல்லி - உத்தரப் பிரதேசம் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தீர்வு காண, விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் மனு வழங்கும் ராகுல் காந்தி!