ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் யாரிச்சர்லா கிரண். இவர், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவந்தார். ஊரடங்கின் காரணமாக, அவர் தனது சொந்த ஊரான பிராகசத்தில் சில மாதகங்களாக வசித்துவருகிறார்.
ஜூலை 19ஆம் தேதியன்று தனது நண்பர்களுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கிரணை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். முகக்கவசம் அணியாமல் வந்ததாக கூறி அவரை காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காவல் துறையினரிடம் வாக்குவாதம் ஏற்படவே கிரணை காவலர்கள் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவர் ஜீப்பில் இருந்தபோது மீண்டும் தாக்கியதாகவும், தப்பிப்பதற்காக அவர் வாகனத்திலிருந்து குதித்து, தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையினர் அவரது தலையில் தாக்கியதால், காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே கிரண் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இளைஞர்களின் மரணத்தைத் தொடர்ந்து சிராலாவின் தாமஸ்பேட்டா பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து மாவட்ட அலுவலர்களால் விசாரணை நடத்தப்படும் என்று பிரகாசம் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சித்தார்த் தெரிவித்துள்ளார்.
இளைஞரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முகமூடி அணியாததால் தலித் இளைஞர்கள் காவல் துறையினரால் கொல்லப்பட்டதாக அம்மாநில எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலித்துகள் குறிவைத்து வருவதாகவும் விமர்சித்துள்ளது.