தூத்துக்குடி: தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் ரயில்வே, துறைமுகங்கள், மின் நிலையங்கள், பிஎஸ்என்எல், வரித்துறை என பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் அலுவலர் முதல் அதிகாரிகள் வரையிலான பணி ஒதுக்கீட்டில் பிற மாநில இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணி வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிலையங்களில் உயர் அலுவலர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழக இளைஞர்களுக்கு பணி மறுப்பு?: இந்த நிலையில், மத்திய அரசு தொடர்ந்து தமிழக இளைஞர்களை வேலைவாய்ப்பில் புறக்கணித்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில், தற்போது தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் "கிளாஸ் ஒன்று"(class one) வகை பணிக்கு தேர்வான தமிழக இளைஞர்களுக்கு பணி மறுக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
தேர்வு அறிவிப்பு: தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், "கிளாஸ் ஒன்று" வகையான சேர்மன், துணை சேர்மன், தலைமை பொறியாளர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கிளாஸ் ஒன்று வகை சட்ட ஆலோசகர், உதவி நிர்வாக பொறியாளர், சிவில் மற்றும் மெக்கானிக் நிலையிலான காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தன.
பிற மாநிலத்துடன் ஒப்பந்தம்: இப்ப பணியிடங்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தி தரும்படி தமிழகம் அல்லாத மற்றொரு மாநில தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகமும், இந்த நிறுவனமும் தேர்வை கடந்த மே மாதம் நடத்தியது. இதில், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் விவரங்களை அனுப்பியது.
4 பேர் தேர்வு: இதில், 1.5 என்ற வகையில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் தேர்வு கடந்த ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதிகளில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் நடைபெற்றது. நேர்முகத் தேர்விற்கு பிறகு இறுதியாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணித் தொழில் புத்துயிர் பெறுமா?
இந்நிலையில், திடீரென மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் தலையீடு காரணமாக, இந்த பணிகளுக்கு நடந்த எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த மூன்று பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்படவில்லை என்று துறைமுகம் செயலாளர் மத்திய அரசுக்கு பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து HMS தொழிற்சங்க நிர்வாகி சத்யா கூறுகையில் "வ.உ.சி துறைமுகத்தில் மூன்று அதிகாரிகள் பணியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இதில், 376 பேர் தேர்வு எழுதியதில், 5 இடங்களை பெற்றவர்களை நேர்முகத் தேர்விற்கு வ.உ.சி துறைமுக நிர்வாகம் அழைத்தது. ஆனால், நேர்முக தேர்வு நடத்தியதில் ஒருவர் கூட தேர்வில் தகுதி பெறவில்லை என்று கூறி தேர்வை ரத்து செய்துள்ளனர்.
இதில், 3 வட மாநில இளைஞர்களைத் தவிர மற்ற அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். முதல் 14 இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் தேர்வில் தகுதியற்றவராக ஆக்கிவிட்டார்களா? காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். துறைமுகத்தில் இருக்கக்கூடிய அதிகாரி பதவிகள் மட்டுமல்ல, அனைத்து வகையான பணியிடங்களும் காலியாக உள்ளது. எனவே, தொழிலாளர்கள் பிரச்னையில் உடனடியாக கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப, ஒரு லட்சம் சம்பளத்திற்கு பெரிய கல்வி நிறுவனங்களை கொண்டு தேர்வு நடத்துகிறார்கள். 30 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் மனக்குமுறலோடு உள்ளார்கள். ஆகவே, துறைமுக ஆணைய தலைவர் உடனடியாக கவனத்தில் கொண்டு தகுதியானவர்களே பணி அமர்த்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்