சென்னை: வள்ளலாரின் 201வது பிறந்த நாள் நிகழ்வு மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஆளுநர் மாளிகையில் உள்ள வள்ளலாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, வள்ளலார் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பழ.கருப்பையா பேசுகையில், “காந்திக்குப் பிறகு வள்ளலாரின் வரலாறு என்னை வியப்படைய செய்தது. இப்படி எல்லாம் ஒரு மனிதன் மனித குலத்தில் வாழ முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன்.
ஒரு நாள் ஒரு பொழுதும் கூட புலால் இல்லாமல் நான் உணவு உண்டதே இல்லை. தேடித்தேடி இறைச்சிகளை உண்டேன். புறா, வான்கோழி ஆகியவற்றை தேடி தேடி உண்டேன். மான்கறி உண்ண வழி இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்ட காலத்தில் வள்ளலார் எனக்குள்ளே வந்தார்.
புலால் உண்ணாதவர்கள் எல்லாம் அகவினத்தார். அதை உண்கின்றவர்கள் எல்லாம் புறவினத்தார். அதுதான் என் ஜாதி என்று வள்ளலார் கூறினார். புலால் உண்ணாதவர்களும் உயிரினங்களை கொல்லாதவர்களும் வள்ளலார் வழியில் சேர வேண்டும் என அவர் எண்ணினார். அதன் அடிப்படையில் நானும் வள்ளலார் வழியில் இணைந்தேன்.
இதையும் படிங்க: ஆளுநருடன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி!
கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக.. அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க. நல்லவர்கள் வாழ வேண்டுமென்றால் நல்லாட்சி இருக்க வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார். அதன் வழியில் கருணையில்லா ஆட்சி கருகி ஒழியட்டும்."
அதைத்தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிலர் சனாதன தர்மத்தை சாதியத்துடன் ஒப்பிடுகின்றனர். சனாதன தர்மத்துக்கு அனைவரும் உட்பட்டவர்கள் தான். சனாதன தர்மத்தை சாதியுடன் ஒப்பிட்டு சிலர் தவறாக பேசி வருகின்றனர். சாதியை பேசக்கூடிய ஒருவன் சனாதனத்தை பின்பற்றக் கூடியவனாக இருக்க முடியாது. சனாதன தர்மத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் கிடையாது.
உலகில் உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், ஈரான் போன்ற பல்வேறு போர்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கண்ணுக்குத் தெரியாத பல போர்களும் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்கின்றன.
இங்கே மக்களுக்கு போதிய நிம்மதி இல்லை. பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளேயே போர்களை நடத்தி நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மத்தியில் நடைபெற்று வரும் ஆட்சி வள்ளலாரின் கருத்துகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பாரதத்தில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
ஒரு குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அந்த காரணத்தை வைத்துக்கொண்டு அவரை வெளியேற்ற கூடாது. இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், மாநில அரசின் திட்டமான செயலால் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்