டெல்லி: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.7425 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறிய நிலையில், திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை வழங்குவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
"புதுடெல்லியில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை மத்திய அரசு ஒதுக்க அனுமதி அளித்துள்ளது. மீதி தொகையானது மாநில அரசின் பங்கு மற்றும் சர்வதேச கடன்களை பெற்று மாநில அரசு மற்றும் மத்திய அரசும் இணைந்து இந்த திட்டத்தை முடிக்கும்," என்று செய்திகள் வெளியாயின.
➡️ With Union #Cabinet's recent approval Chennai Metro Rail Project Phase 2 as the ‘Central sector’ project, Central Government to finance almost 65 per cent of the estimated cost
— PIB India (@PIB_India) October 5, 2024
➡️ This financing will include the entire required loan of Rs. 33,593 crore besides the equity and…
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்: இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக அரசியல் ஆதாயம் தேடும் வகையில் பாஜகவினர் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக அரசு நேற்றுக் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த பதவில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா என்பவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு டேக் செய்யப்பட்டிருந்தது. எஸ்.ஜி.சூர்யாவின் எக்ஸ் பதிவில், "சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கி இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்," என கூறியிருந்தார்.
இதையும் படிங்க மெட்ரோ 2ம் கட்ட பணி;மத்திய அரசின் பணம் எவ்வளவு?- தமிழக அரசு விளக்கம்
இதற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னை மெட்ரோ திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.63,246 கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்," என கூறப்பட்டிருந்தது. மேலும், "இது தவறான தகவல். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.7425 கோடி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.22,228 கோடி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும்," எனவும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மத்திய துறை திட்டம்: இந்த நிலையில் மீண்டும் மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரை திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் 'மாநிலத் துறை' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
65 % தொகையை மத்திய அரசு வழங்குகிறது: சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும்.எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.
பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்துக்கு நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு குறித்ததாக இருந்தது.
கடன் முகமைகளுடன் மறு பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை , ஆசிய வளர்ச்சி வங்கி , ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.
இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாகக் கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மாநில அரசுக்கும் மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கும் செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து பாஸ் த்ரூ உதவி என்ற முறையில் நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்கு செல்லும் வழிமுறையாக மாற்றியமைக்கப்படுகிறது.
சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருக்கும் இடத்தில் சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்பட நியமிக்கப்படும். கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும். கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு மாரடோரியம் (moratorium) காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்த பின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சி.எம்.ஆர்.எல். இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும்," என கூறப்பட்டுள்ளது.