வேலூர்: வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரங்காபுரத்தில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். இதில் பிச்சாண்டி (45), கோபி (26) ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி திடீரென அலுவலகத்திற்குள் வந்த 3 மர்ம நபர்கள் பிச்சாண்டி, கோபி ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், தனிப்படை அமைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சின்ராஜ், மாதேஸ்வரன் மற்றும் பைனான்ஸ் கன்சல்டிங் ஊழியர் கோபி, பொய்கையைச் சேர்ந்த தக்காளி மணி ஆகியவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சின்ராஜ், மாதேஸ்வரன், கோபி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கன்சல்டிங் உரிமையாளர் ரமேஷிடம் பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக ஆட்கள் இல்லாத நேரத்தில் மூன்று பேரும் அலுவலகத்திற்குள் புகுந்து பிச்சாண்டி மற்றும் கோபியை கத்தியால் லேசாக குத்திவிட்டு சில முக்கிய ஆவணங்களை எடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : "குலத்தொழிலை அனுமதிக்காத திமுகவை ஏன் எதிர்க்கவில்லை?" - வானதி சீனிவாசன் கேள்வி!
பின்னர் தக்காளி மணி செல்போனில் ரமேஷை தொடர்புகொண்டு ரூ.35 லட்சம் கொடுத்தால் தான் அலுவலகத்தில் இருந்து திருடிய முக்கிய ஆவணங்களை திரும்ப கொடுப்பதாகவும், இல்லையென்றால் அதை எரித்துவிடுவோம், இது பற்றி போலீசுக்கு தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலீசார் நெருங்குவதை அறிந்ததும் தக்காளி மணி தலைமறைவாகி விட்டார். இந்த திட்டத்திற்கு தக்காளி மணிக்கு மாதேஸ்வரன் சிம்கார்டும், சின்ராஜ் காரும் கொடுத்துள்ளார். தற்போது கோபி, மாதேஸ்வரன், சின்ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான தக்காளி மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்