சிவவிஷ்ணுவின் அம்சம்
கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனின் திருநடை இன்று முதல் 48 நாள்களுக்கு திறந்திருக்கும். சபரிமலை புனித யாத்திரை செல்பவர்கள் இருமுடி கட்டி கடும் விரதமிருந்து செல்வார்கள். இந்த விரதம் ஒரு வார காலம் முதல் ஒரு மண்டலம் வரை தொடரும்.
கரடுமுரடான மலைப்பகுதியிலும் 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சுவாமியே ஐயப்பா' என சரணகோஷம் முழங்க செல்வார்கள். ஐயப்பன் சிவ விஷ்ணுவின் அம்சம் என்பதால், அவருக்கு தேங்காய் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. பசு நெய் கோபாலனாகிய விஷ்ணுவையும் முக்கண் தேங்காய் சிவனையும் குறிக்கும். ஆகவே இதனை உடனே எடுத்துச் செல்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் தலையீடு
இந்தக் கோயிலில் காலங்காலமாக சில ஆச்சாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதில் முக்கியமானது, 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவது கிடையாது. 10 வயதுக்குள்பட்ட, 50 வயதை கடந்த பெண்கள் இங்கு தாராளமாகச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம்.
இந்த நிலையில் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து பெண்ணார்வலர்கள் என்ற பெயரில் சில இளம்வயது பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்தனர்.
பதற்றம்
இதில் சில மாற்று மத பெண்களும் அடங்கும். இதனால் சபரிமலை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சுவாமி ஐயப்ப பக்தர்களும் காயமுற்றனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த மனுக்கள் மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றியது.
ஆந்திர பெண்கள் தடுத்து நிறுத்தம்
எனினும் கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்கவில்லை. இதனால் தற்போதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. முன்னதாக, விளம்பரம் தேடும் நோக்கத்தில் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாது என்று கேரள தேவசம் வாரியத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.
அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தீர்ப்பு குறித்து சட்டவல்லுநர்களோடு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை காவலர்கள் பம்பை அருகே தடுத்து நிறுத்தினர்.
விசாரணை
அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 50 வயது நிறைவடையாத நிலையில் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டே தீருவேன்' - திருப்தி தேசாய் திட்டவட்டம்