நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தனிமனித இடைவெளி கடைபிடிக்கவேண்டும் எனவும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரி தொகுதியில் தண்ணீர் குழாய் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகையும் அத்தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவிற்கு மக்கள் வழிநெடுக நின்று மலர்தூவி வரவேற்றனர். இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இதுகுறித்து பேசிய ரோஜா, புத்தூர் பகுதியிலுள்ள மக்கள் நீண்ட நாட்களாக அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவையின்றி தவித்துவந்தனர். இவற்றை ஜெகன்மோகன் தலைமையிலான அரசு முன்வந்து சீராக்கியது. இதுதொடர்பாக நேர்மறையான கருத்துகளைக் கூற விரும்பாத எதிர்க்கட்சிகள், எதிர்பாராமல் நடந்த வரவேற்பை வைத்து அரசியல் செய்வதாக சாடினார்.
மேலும், அப்பகுதி மக்கள் இப்படியொரு வரவேற்பை அளிப்பார்கள் எனத்தான் எதிர்பார்க்கவில்லை என்றும், மக்களின் மனதினை புண்படுத்த விரும்பாமலே அந்த மரியாதையினை தான் ஏற்றுக்கொண்டதாகவும் விளக்கமளித்தார். மேலும், மக்கள் ஊரடங்கு உத்தரவினை மீறும் விதமாக செயல்படவில்லை எனவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் தங்கள் அரசின் மீது தேவையற்ற பழி சுமத்துவதையே முழுநேர பணியாக கொண்டுள்ளனர் எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: வீடுகளுக்கு கிருமி நாசினி தெளித்த ரோஜா