இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட சிறப்பு அமலாக்க பணியக கூடுதல் கண்காணிப்பாளர் வகுல் ஜிண்டால், “குடிவாடா நகரில் ஒருவர் மதுபாட்டில்களை அளவுக்கு அதிகமாக வாங்கி, பதுக்கிவைத்திருப்பதாக கடந்த 26ஆம் தேதியன்று ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, தனது காரில் மதுபான பாட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்த பொலு சோமேஸ்வர ராவ் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 188 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மேலும் 730 பாட்டில்களை அவரது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்து மொத்தமாக ரூ. 2,65,900 மதிப்பிலான 918 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இவை அனைத்தையும் ஒரே கடையிலிருந்தே ராவ் வாங்கியுள்ளார் என்பதும், இதற்கு அந்த கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருவரும் கூட்டு என்பதும் தெரியவந்துள்ளது. விதிகளின்படி, ஒரு நபருக்கு மூன்று பாட்டில்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும். ஆனால், விற்பனையாளரும் மேற்பார்வையாளரும் ராவிற்கு இத்தனை மது பாட்டில்களை விற்றுள்ளனர்.
இந்த மது பாட்டில்களை ராவ் சில கடைகளுக்கு வழங்கி வருகிறார். அதை கண்டறிந்த நாங்கள் குடிவாடா கிராமப்புறத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தி 39 பாட்டில்களை கைப்பற்றினோம். இந்த வழக்கில் விசாரணை தொடர்கிறது" அவர் கூறினார்.
முன்னதாக, தெலங்கானாவிலிருந்து ஆந்திராவிற்கு சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட 242 மது பாட்டில்களை ஆந்திர மாநில காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 27) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.