ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையர் ரமேஷ் குமாருக்கும் அம்மாநில அரசுக்கும், மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த, ஆந்திர உள்ளாட்சித் தேர்தலை, கரோனா பரவல் காரணமாக, தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் தள்ளிவைத்தார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணைய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.
அதைத்தொடர்ந்து, மாநில அரசு தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க மறுப்பதாகவும்; தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி, பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் ரமேஷ் குமார் மனு அளித்தார்.
ஆந்திர அரசுக்கும் தேர்தல் ஆணையருக்கும் இடையேயான மோதல் போக்கு முற்றியதை அடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைத்து ஜெகன் மோகன் அரசு ஆணைப் பிறப்பித்தது. மேலும், முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி. கனகராஜ் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மாநில அரசின் இந்த உத்தரவுகளுக்கு எதிராக, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ரமேஷ் குமாரை மீண்டும் தேர்தல் ஆணையராக நியமிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மாநில அரசின் இரண்டு ஆணைகளையும் ரத்து செய்தது. இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதைத்தொடர்ந்து ரமேஷ் குமார் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மாநில அரசு அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தன்னை தேர்தல் ஆணையராக மாநில அரசு நியமிக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் குமார் தொடர்ந்தார்.
ரமேஷ் குமாரின் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து ஆளுநர் பிஸ்வா பூஷணை சந்திக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் தேதி, ரமேஷ் குமார் ஆளுநர் பிஸ்வா பூஷண் ஹரிச்சந்தனை நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் தேர்தல் ஆணையராக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து வேறுவழியின்றி, தற்போது ரமேஷ் குமாரை மீண்டும் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ!