ஆந்திர மாநிலத்தில், நிலவும் கரோனா பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவசர சுகாதார சேவைகளை முறையாக பொதுமக்களுக்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாள்பட்ட நோய்கள், கர்ப்பிணிகள் இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 1060 புதிய இருசக்கர வாகன 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும். டெலிமெடிசினின் ஒரு பகுதியாக இத்திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அப்போது ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் கீமோதெரபி, டயாலிசிஸ் போன்ற அவசரகால சுகாதார சேவைகளையும், அதுமட்டுமின்றி கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ தேவைகளையும், பிரசவத்திற்குப் பிந்தைய மருத்துவ தேவைகளையும் முறையாக வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மாநிலத்தில் இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்களில் சராசரியாக மூன்றாயிரத்து 768 மக்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 284 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாட்டில் 4.01 விழுக்காடாகவும், மாநிலத்தில் 1.06 விழுக்காடாகவும் உள்ளது. நாட்டிலேயே இது மிகக் குறைவான பாதிப்பாகும். அதேபோல் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் 32.90 விழுக்காடு உள்ளது. ஆனால், மாநிலத்தில் 53.44 விழுக்காடாக குணமடைபவர்கள் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளது' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தவறுதலாக விடுவிக்கப்பட்டு ஆந்திராவில் சிக்கிய குற்றவாளிகள்