ரோமன் ரொலான் வீதியில் உள்ள வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவலர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள், கும்பகோணம் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று புதுச்சேரி விரைந்தனர்.
இன்று அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள் அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வீட்டின் பல்வேறு பகுதிகளில் 60 ஐம்பொன் சிலைகளும், 14 கற்சிலைகளும் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 74 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல்செய்தனர்.
சிலைகள் இருந்த வீட்டின் உரிமையாளர், ஜான் பால் ராஜரத்தினம் என்பதும், இவர் 2016ஆம் ஆண்டு புதுச்சேரியில் பழமையான சிலைகள் பதுக்கிய வழக்கில் தொடர்புடைய பெண்ணின் சகோதரர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பறிமுதல்செய்யப்பட்ட சிலைகளுக்கு தொல்லியல் துறை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டுவருவதாக, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகே, இதில் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் இருந்த ஒரே தமிழ் வழி பள்ளி மூடல்; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!