புதுச்சேரி நகராட்சி சார்பில் ‘இருப்போர் கொடுக்கலாம், இல்லாதோர் பெறலாம்’ என்ற நோக்கத்தில் அன்புச் சுவர் அரசு மருத்துவமனை மதில் சுவரில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
வீட்டில் துணி உள்ளிட்ட பொருட்கள் தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை எப்படி மற்றொரு நபருக்கு கொடுப்பது என தெரியாமல் வீட்டிலிருந்து குப்பையில் வீசி விடுகின்றனர்.
அவை குப்பைத் தொட்டிக்குச் சென்று மக்கி வீணாகிறது.
இதனை தடுப்பதற்காக இருப்போர் கொடுக்கவும் தேவை உள்ளோர் அவற்றைப் பெறும் நோக்கில் புதுச்சேரி நகராட்சி இந்த அன்புச் சுவர் ஒன்றை ஏற்படுத்திள்ளது. இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர் கண்ணன், நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பொருட்களை வழங்கி சுவரில் வைத்தனர்.
அந்த சுவரில் பழைய சட்டை வேட்டி, பேண்ட் ,புத்தகங்கள், பொம்மைகள் ,காலணிகள் ,பிஸ்கட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட நல்ல நிலையில் உள்ள பொருட்களை வைக்கலாம்.
அவசியம் உள்ளவர்கள் அவர்களாகவே அதனை எடுத்துச் செல்லலாம். அன்புச் சுவர் மூலமாக யார் பொருளை வைத்தார்கள் என்பது யார் எடுத்துச் சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
முகம் தெரியாதவரிடமிருந்து கிடைத்த உதவி, தேவையில் இருப்பவர்களை ஆறுதல் அடைய செய்யும்.
ஆதலால், மக்கள் தாராளமாக உதவிகளை செய்ய முன்வரவேண்டும். புதுச்சேரி முழுவதும் இந்த திட்டம் கூடிய விரைவில் பெருகும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிறந்தநாளில் ஏழைகளுக்கு அன்புச்சுவரை பரிசாக அளித்த சமூக செயற்பாட்டாளர்!