இந்தியாவில் நடந்த சாதி ஆணவப் படுகொலைகளில் முக்கியமாக கருதப்படுவது தெலங்கானாவைச் சேர்ந்த பிரனவின் கொலை. 2018ஆம் ஆண்டு மாற்று சமூகத்தைச் சேர்ந்த அம்ருதா, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரனவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன் தந்தை எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்ட அம்ருதாவின் மகிழ்வான குடும்ப வாழ்வு சொற்ப காலத்திலேயே முடிந்து போனது.
அம்ருதா கர்ப்பம் தரித்த 6ஆவது மாதத்தில் மருத்துவ பரிசோதனைக்காக கூட்டிச் சென்று வந்த பிரனவ், மருத்துவமனை வாசலிலேயே அம்ருதாவின் தந்தை அனுப்பிய கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். தன் கண் முன்னே கணவனை இழந்து நிர்கதியாய் நின்றார், அம்ருதா. இந்தக் கொலைக்குப் பிறகு நாடெங்கிலும் பல தரப்பு மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கொலைக்குற்றவாளிகளாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், பிகாரில் இருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படையினர் சிறைக்குச் சென்றனர். ஆனால், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மாருதி ராவ் பிணை மூலம் வெளியே வந்தார். அம்ருதாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் அம்ருதாவின் தந்தை இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரு தனியார் உணவகத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதன் பிறகு நடந்த விசாரணையில் மாருதி ராவ் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இறந்த அறையில் கிடைத்த கடிதத்தில் அம்ருதாவை அம்மாவிடம் செல்லவேண்டியும், தன்னை மன்னிக்கவும் வேண்டியிருந்தார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு மாருதி ராவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இறுதியாக தந்தையின் முகத்தை பார்க்கவேண்டும் என எண்ணிய அம்ருதா, தன் தந்தை வீட்டுக்குச் செல்ல மாருதியின் தற்கொலைக்குக் காரணம் அம்ருதா தான் என உறவினர்கள் சாடினர்.
இதுகுறித்து அம்ருதா பேசுகையில், 'கணவனை இழந்த என் அம்மாவின் வலி எனக்குத் தெரியும். இந்த வழக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அம்மா என்னுடன் வந்து வாழ விரும்பினால், அவரை வரவேற்க நான் தயாராக இருக்கிறேன்' என்றார்.
இந்தக் கொலை வழக்கு குறித்த பயம் இருந்ததால், மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... சாதி மறுப்புத் திருணம் செய்த தம்பதிகளை கடத்தி தாக்குதல்!