கொல்கத்தா: அடுத்த ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று கொல்கத்தா சென்ற அவர், இன்று மிட்நாபூர், பிர்பும் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
மிட்நாபூரில் நடைபெற்ற பரப்புரையின்போது, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுவேந்து அதிகாரி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
அப்போது பேசிய, சுவேந்து அதிகாரி, " எனக்கு அமித்ஷாவுடன் நீண்ட உறவு உள்ளது. ஒரு சகோதரனைப் போல என் மீது பாஜகவினர் அன்பு காட்டுகின்றனர். நான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது எவ்வாறு இருக்கிறேன் என்பதை அறிவதற்காக அமித்ஷா என்னை இருமுறை தொடர்புகொண்டார்" என்றார்.
இதனையடுத்து, பரப்புரையில் பேசிய அமித்ஷா, தேர்தல் நெங்கிவரும் வேளையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார் என்றும், அக்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய வர வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: ஆயிரம் அமித் ஷா வந்தாலும் இதை மாற்ற முடியாது - சுப்புராயன் எம்பி