மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான பல்கரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரண்டு சாமியார்கள் உள்ளிட்ட மூவரை, அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொலை செய்தது. கண்டிவிலி பகுதியிலிருந்து சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். இதனிடையே, இதுகுறித்த முழுமையான விவரங்களின் அறிக்கையை மகாராஷ்டிரா அரசு சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சாமியர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிஐடி குற்றப்பிரிவின் ஏடிஜி அதுல்சந்திர குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 5 முக்கிய குற்றவாளிகள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு 9 சிறார்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாக 7.5 நாள்கள் ஆகிறது: மத்திய அரசு!